இந்தியா

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

rajakannan

மண்டல கிராமப்புற வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 56 கிராமப்புற வங்கிகளில் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். சுமார் 22 ஆயிரம் கிளைகள் உள்ளனர். 95 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்கள் இந்த வங்கிகளில் பணியாற்றுகிறார்கள். இந்த வங்கிகளில் 50% பங்கு மத்திய அரசிடமும் 15% பங்கு மாநில அரசிடமும் 35% பங்கு இந்த வங்கிகளுக்கு நிதியளிக்கும் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி போன்ற பெரிய பொதுத்துறை வங்கிகளிடமும் இருக்கும். 

இந்நிலையில், கிராம வங்கிகள் சரியாக லாபம் ஈட்டுவதில்லை என்பதால், படிப்படியாக தனியார்மயம் ஆக்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது ஆட்சியில் ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி இந்த கிராம வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்குக் கொடுக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும், மோடி தலைமையிலான அரசு கிராமப்புற வங்கிகளை தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அதன் ஊழியர்கள் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டி வருகின்றனர். பல கட்டங்களாக போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், கிராமப்புற வங்கிகளை தனியார்மயமாக்குதல் தொடர்பாக மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பினர். இதர்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ‘கிராமப்புற வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிராமப்புற வங்கிகளை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.