bengaluru hair dryer explosion news PT
இந்தியா

பார்சலில் வந்த 'ஹேர் டிரையர்' வெடித்தது.. பிரித்து பார்த்த எதிர்வீட்டு பெண்ணின் விரல்கள் துண்டிப்பு!

ஆன்லைனில் ஆர்டர் போடாமல் வந்த ஹேர் ட்ரையர் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

ஆர்டர் செய்யாமலேயே வந்த கூரியர் பார்சல்

கர்நாடக மாநிலம், பாகல்கோட், இளகல் நகரில் வசித்தவர் பாப்பண்ணா. ராணுவத்தில் பணியாற்றிய இவர் 2018ல் ஜம்மு - காஷ்மீரில் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது மனைவி பசம்மா, 35. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சசிகலா. இவரும், மறைந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் மனைவிதான்.

இந்நிலையில், சசிகலாவிற்கு கூரியரில் பார்சல் ஒன்று வந்தது. அப்போது, அவர் வெளியூர் சென்றிருந்தார். அவரை கூரியர் ஊழியர், மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ai மாதிரிப்படம்

ஆனால், அவரது முகவரிக்கு தான் பார்சல் வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் பணமும் செலுத்தப்பட்டிருந்தது. எனவே, தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பசம்மாவைத் தொடர்புகொண்ட சசிகலா கூரியர் அலுவலகத்திற்கு சென்று தனக்கு வந்துள்ள பார்சலைப் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

வெடித்துச் சிதறிய ஹேர் டிரையர்

அதுமட்டுமின்றி பார்சலை பிரித்து என்ன இருக்கிறது என்று பார்க்கும்படியும், பசம்மாவிடம் சசிகலா தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் பசம்மா அதைப் பிரித்துப் பார்த்ததில் அதில், ஹேர் டிரையர் இருப்பது தெரிந்தது. அது எப்படி செயல்படுகிறது என பார்க்க, சுவிட்ச் பிளக்கில் செருகி உபயோகித்து பார்த்தபோது, ஹேர் டிரையர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பசம்மாவின் இரண்டு கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பசம்மாவின் 9 விரல்கள் துண்டாகியது. மேலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பசம்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காயங்கள் மிக கடுமையாக இருந்துள்ளது. அவரது இரத்தம் வீடுமுழுவதும் தெறித்துக் கிடந்ததாக ஆங்கில ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கடந்த 15 ஆம் தேதி நிகழ்ந்திருந்தாலும், கடந்த புதன் கிழமை தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாதிரிப்படம்

சசிகலா ஆர்டர் செய்யாத நிலையில், அவரது வீட்டுக்கு யார் அந்த பார்சலை அனுப்பினர் என்பது குறித்து, இளகல் போலீசார் விசாரித்தனர். அந்த பார்சலை, சசிகலா ஆர்டர் செய்யவில்லை என்பதும் அது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்தது என்பதும் தெரிய வந்தது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஹேர் டிரையர் உற்பத்தில் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் சர்க்யூட் காரணமாக ஹேர் ட்ரையர் வெடித்திருந்தது என காவல் துறையினர் முடிவு செய்தாலும், ஆர்டர் செய்யாமல் ஹேர் ட்ரையர் வந்ததும் சந்தேகத்தை ஏற்படித்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.