தவெக முதல் மாநாடு முகநூல்
இந்தியா

மாநாடு நடைபெறும் திடல்: ‘தவெக நிர்வாகிகள் உட்பட யாருக்கும் 26ம் தேதி வரை அனுமதி இல்லை’!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் திடலுக்குள், வரும் 26 ஆம் தேதி வரை, கட்சி நிர்வாகிகள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் வரும் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தவெக முதல் மாநாடு தயாராகும் பணிகள்

மாநாட்டுப் பணிகளை பார்வையிடுவதற்காக, தினந்தோறும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும், ஆர்வத்துடன் வருகிறார்கள். இந்நிலையில், “வரும் 26 ஆம் தேதி வரை மாநாட்டு திடலுக்குள் யாருக்கும் அனுமதி இல்லை” என்று அறிவித்து, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. திடலுக்கு முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, திடலை பார்வையிட வரும் அனைவரையும், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் வெளியூர்களில் இருந்து மாநாட்டுப் பணிகளை பார்வையிட வந்த கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாநாட்டுத் திடலுக்கு அடுத்து உள்ள விளைநிலங்களுக்கு செல்ல முடியவில்லை என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

தவெக மாநாடு மேடை

இதையடுத்து அங்கு ஆய்வு செய்த விக்கிரவாண்டி வருவாய்த் துறை அதிகாரிகள், இரும்புத் தடுப்புகளை அகற்றினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், மாநாட்டு திடலைப் பார்க்க வருவோர், பவுன்சர்கள் மூலம் தடுக்கப் படுகிறார்கள். இந்நிலையில், மாநாட்டு பந்தலுக்கு செல்லும் முகப்பு வாயில் சாலை அருகே தேங்கிய மழை நீரை, புல்டோசர் மூலம் தள்ளிவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.