இந்தியா

"எந்த அப்பாவியும் இப்படி கஷ்டப்பட கூடாது!"- 'லவ் ஜிஹாத்' சட்டத்தால் பாதித்த இளைஞர் வேதனை

"எந்த அப்பாவியும் இப்படி கஷ்டப்பட கூடாது!"- 'லவ் ஜிஹாத்' சட்டத்தால் பாதித்த இளைஞர் வேதனை

webteam

'லவ் ஜிஹாத்' சட்டத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட சாமானிய இளைஞர் ஒருவர் சமூகத்தில் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து வேதனையுடன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

கடந்த மாதம் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் அக்‌ஷய் குமார் தியாகி அளித்த புகாரில் நதீம் மற்றும் அவரது சகோதரர் சல்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட 'லவ் ஜிஹாத்' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நதீம், முசாபர்நகரில் உள்ள தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து, தனது மனைவி பருலை மதம் மாற்றும் நோக்கத்துடன் மணம் முடித்தார் என்று அக்‌ஷய் புகார் கொடுக்க, 'லவ் ஜிஹாத்' வழக்குப் பாய்ந்தது.

ஆனால், நீதிமன்றம் இளைஞர் நதீமை கைது செய்வதற்கு தடை விதித்ததோடு, ``காதலிப்பது தனி மனித சுதந்திரம். அதை தடுக்க முடியாது. அதேபோல, மதம் மாற்றுவதற்காகவே அந்த பெண்ணுடன் உறவை நீடித்தார் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை" என்று அதிரடியாக கூறியது. இதேபோல் இன்னொரு 'லவ் ஜிஹாத்' வழக்கிலும் உத்தரப் பிரதேச அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

மொராதாபாத் மாவட்டத்தில் 'லவ் ஜிஹாத்' சட்டத்தின் கீழ் ரஷீத் என்ற 22 வயது இளைஞரும், அவரது சகோதரரும் அதிரடியாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். ரஷீத், இந்துப் பெண் பிங்கியை ஐந்து மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இந்தத் திருமணத்தை வலதுசாரி இயக்கமான பஜ்ரங் தளத்தினர், "லவ் ஜிஹாத்" என்று குற்றம்சாட்டி பெண்ணையும், ரஷீத் மற்றும் அவரின் சகோதரரையும் போலீஸிடம் ஒப்படைத்தனர். ஆனால் நீதிபதியிடம் மணப்பெண் பிங்கி, "என் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ரஷீத்தை திருமணம் செய்துகொண்டேன். நானாகவே மதம் மாறினேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" என சாட்சியம் அளித்தார்.

அதேபோல், வலுக்கட்டாயமாக அந்தப் பெண் மதம் மாற்றப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை திரட்ட முடியாததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், இது மாதிரியான தவறான குற்றச்சாட்டுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும், அவர்களது குடும்பத்தினரையும் சமூகம் எப்படிப் பாதிக்கிறது என்பதை நதீமூக்கு நேர்ந்ததை வைத்து அறிந்துகொள்ளலாம். நதீம் இந்த வழக்கில் சிக்கியதை அடுத்து அவரின் குடும்பத்தினர் சமூகத்தில் பல்வேறு விதமான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று அவரே வேதனை தெரிவிக்க கூறியுள்ளார்.

அதில், ``எந்த அப்பாவி நபரும் இப்படி கஷ்டப்படக் கூடாது. எனது நற்பெயர் பாழாகிவிட்டது. நான் ஒரு முடிவற்ற சோதனையை சந்தித்தேன். அது ஒருபோதும் ஈடுசெய்ய முடியாதது. நான் பணிபுரியும் தொழிற்சாலையில், மக்கள் என்னைப் பற்றி கிசுகிசுப்பதை காண்கிறேன். என் கிராமத்தில், என் அயலவர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள். இது முடிவடையாது. நாங்கள் எதுவும் செய்யவில்லை.

எதிர்காலத்தில், 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் காவல்துறையினர் விரிவாக விசாரிக்க வேண்டும். நான் என்ன செய்தேன் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன்" என்று நதீம் வேதனை தெரிவித்துள்ளார்.

இவரை போலவே ரஷீத் விவகாரத்திலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த பிங்கிக்கு காப்பகத்தில் செலுத்திய ஊசியால் ஏழு வாரங்கள் கர்ப்பமாக இருந்த அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இது பெரிய சர்ச்சையாக மாறியது. பின்னர் குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக உத்தரப் பிரதேச அரசு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு