இந்தியா

மத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”

மத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”

webteam

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். இதனையடுத்து அவர்களுக்கு தேவையான இருப்பிடங்களை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சாதாரணமாக புதிதாக தேர்வு செய்யப்படும் எம்.பி.க்களுக்கு , முதல் கூட்டத்தொடர் முடிந்தே வீடுகள் ஒதுக்கப்படும். மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்கள், முன்னர் ஒதுக்கப்பட்ட வீடுகளில் தங்கி இருப்பார்கள். 

அதிகாரப்பூர்வ வீடு ஒதுக்கப்படும் வரை 5 நட்சத்திர ஹோட்டல்களில் எம்.பி.க்களுக்கு அறைகள் வாடைக்கு எடுக்கப்பட்டு கொடுக்கப்படும். இந்நிலையில் வாடைக்கு எடுக்கப்பட்ட அறைகளின் செலவு பல மடங்கு உயர்ந்தது. இதனை தவிர்க்க எண்ணிய மத்திய அரசு தி வெஸ்டர்ன் கோர்ட் என்ற கட்டடத்தை கட்டியது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரலில் இதனை திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் சுமார் 88 அறைகள் உள்ளன. 

இதே போல் புதிதாக தேர்வு செய்யப்படும் எம்.பி.க்களுக்கு என புதிய வீடு கொடுக்கப்படும் வரை அனைத்து மாநில அரசுகளூம் தங்களது டெல்லி இல்லத்தில் அறைகள் ஒதுக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் மாநில அரசுகளின் இல்லங்களில் வேறு யாருக்கும் அறைகள் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியால் பெருமளவு செலவு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னாள் எம்.பி.க்களை உடனடியாக காலி செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  

Source : The Hindu