இந்தியா

“எல்லாம் நம் இதயங்களில்தான் இருக்கிறது”- மதங்களை கடந்து மனிதம் போற்றும் இளைஞர்..!

webteam

இந்து கோயிலை சுத்தம் செய்து சேவை செய்து வரும் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் அயோத்தி தீர்ப்பு குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவே எதிர்பார்த்த வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி தீர்ப்பை நேற்று உச்சநீதிமன்றம் வழங்கி கொண்டிருந்தபோது அதை பற்றி எதையும் அறிந்து கொள்ளாமல் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் ராஜாஜி நகரில் உள்ள ராமர் கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது பலரையும் ஈர்க்கும்படி இருந்தது. இது குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்தான் இந்தச் செய்தி பதிவாகி உள்ளது.

27 வயது நிரம்பிய இளைஞர் சதாம் உசேன். இவர் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரில் வசித்து வருகிறார். பிறப்பால் இஸ்லாமியரான இவர் தன் மதத்தை எந்தளவுக்கு நேசிக்கிறாரோ அதே அளவுக்கு இந்து மதக் கடவுள்களையும் நேசித்து வருகிறார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை நேற்று வழங்கிக் கொண்டிருந்த தருணத்தில் அதை பற்றி எதையும் அறியாத சதாம் உசேன், பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ராமர் கோயில் ஒன்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சதாம் அந்தக் கோயில் அருகே உள்ள பூஜைப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்காக மசூதிக்கு செல்லும் இவர் இதர கிழமைகளில் இந்துக் கோயில்களை சுத்தம் செய்து சேவை செய்து வருகிறார். கோபுரங்களை தூய்மை படுத்துவது ஆலய பிரகாரங்களை சுத்தம் செய்வதை தன் கடமையாக கொண்டுள்ளார்.

இவரிடம் அயோத்தி தீர்ப்பு குறித்து கேட்டபோது, “எனக்கு அயோத்தி தீர்ப்பு குறித்து இன்று என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாது. நான் டிவி செய்திகளை பார்க்கவில்லை. என் சகோதரர் வந்து என்னிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்தத் தீர்ப்பு கடவுளின் வாழ்த்து. கடவுள் ராமர் அல்லது அல்லாஹ் இடையே என்னால் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை. நான் மசூதிக்கு போய் தொழுகை செய்கிறேன். அங்கே சுத்தம் செய்கிறேன். அதேபோல் ராமர் கோயிலுக்குப் போய் சுத்தம் செய்கிறேன். நான் இதன் மூலம் இரண்டு இடங்களிலும் அமைதியை, மகிழ்ச்சியை பெறுகிறேன்.  எல்லாம் நம் மனதிலும் இதயத்திலும்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

சதாம், ரம்ஜானையும் ராம நவமியையும் கடைபிடித்து வருகிறார். இந்துக் கோயில்களுக்கு சென்று சேவை செய்வதை போலவே தொழுகை நேரங்களில் மசூதிக்கு சென்று பழங்களை வழங்குவது போன்ற சேவை காரியங்களில் சதாம் ஈடுபட்டு வருகிறார். இதை இடைவிடாமல் எல்லா மாதங்களிலும் செய்து வருகிறார் சதாம். இவர் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வெங்கடேஷ் பாபு என்பவர் நடத்தி வரும் பூஜை கடையில் வேலை பார்க்கும் சதாம், வேலை நேரம் போக ஓட்டுநராகவும் பணி செய்து வருகிறார். இவர் தன் சகோதரர் மற்றும் தாய் உடன் வசித்து வருகிறார்.