இந்தியா

ரயில்களில் இனி இரவில் செல்ஃபோன் சார்ஜ் செய்ய இயலாது!

ரயில்களில் இனி இரவில் செல்ஃபோன் சார்ஜ் செய்ய இயலாது!

jagadeesh

மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக, ரயில்களில் செல்ஃபோன்களை சார்ஜ் செய்யும் வசதி இரவு நேரத்தில் துண்டிக்கப்படும் என, ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களில் பயணிகளின் வசதிக்காக செல்ஃபோன்களை சார்ஜ் செய்ய PLUG POINTகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க, PLUG POINT-களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மட்டும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்ஃபோனை சார்ஜ் செய்ய பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சில ரயில்வே மண்டலங்களில் இம்முறை செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் சில ரயில்களில் மின்கசிவால் தீ விபத்து நேர்ந்ததால், முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் "சில ரயில் தீ விபத்துகள் ஏற்பட்டதன் விளைவாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் விபத்துகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. ரயில்களில் இருக்கும் பிரதான ஸ்விட்ச் போர்டுகள் இரவு 11 முதல் காலை 5 மணி வரை அணைக்கப்பட்டிருக்கும்" என தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு பெங்களூர் - ஹசுர் சாஹிப் நன்தத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அது சார்ஜரால் ஏற்பட்ட மின்கசிவு என கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ரயில்வே வாரியத்திடம் இத்தகைய யோசனையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.