மாயாவதி திட்டவட்டம் புதிய தலைமுறை
இந்தியா

“மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்ற முடிவை நாங்கள் எடுக்க இதுவே காரணம்” - மாயாவதி

2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சி செய்து வரும் பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க I.N.D.I.A கூட்டணி முனைப்பு காட்டிவருகிறது. மேலும் மக்களவை தேர்தல் களம் நெருங்கி வந்து கொண்டிருக்கும் சூழலில் சில கட்சிகள் தங்களது கூட்டணியை அறிவித்தும் சில கட்சிகள் கூட்டணியை அறிவிக்காமலும் இருக்கின்றனர்.

இந்நிலையில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த அணி திரட்டி வரும் I.N.D.I.A கூட்டணியில் சிக்காத கட்சிகளில் ஒன்றுதான் பகுஜன் சமாஜ் . இதன் தலைவர் மாயாவதி. உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்தவரை கணிசமான வாக்கு வங்கி என்பது உள்ளது.

இந்நிலையில் இக்கட்சியின் தலைவர் மாயாவதி ’2024 மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி இல்லை என்று முன்னதாகவே கூறியிருந்தார். ஆனால் இவர் நிச்சயம் கூட்டணி வைப்பார் என்று பல வதந்திகள் எழுந்தநிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக, “2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி செய்தியாளர் சந்திப்பில் ஒருமுறை பேசுகையில், “ மாயாவதி , பாஜகவை உண்மையாகவே எதிர்ப்பதாக கருதினால் அவர் I.N.D.I.A கூட்டணியில் இணைய வேண்டும்.ஆனால் அவர்களை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை” என்று கூறியிருந்த நிலையில்,

அதற்கு பதிலளிக்கும் விதமாக , மாயாவதி ” எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் எப்போதும் எங்களுக்கு பலனளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம். இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால் வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்களின் மூலம் பாஜக - வின் கை உத்திரபிரதேசத்தில் ஓங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட இந்தபிளவு பாஜகவிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.