இந்தியா

பணமதிப்பிழப்பால் எத்தனை பேர் பயனடைந்தார்கள்? நிதிஷ்குமார் கேள்வி!

பணமதிப்பிழப்பால் எத்தனை பேர் பயனடைந்தார்கள்? நிதிஷ்குமார் கேள்வி!

webteam

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் அதன்மூலம் யார் பயனடைந்தார்கள்? என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

பீகாரில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் 64வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் மற்றும் பீகார் துணை முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார், “நான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஆதரவாளர் தான். ஆனால், அதன்மூலம் எத்தனை பேர் பயனடைந்தார்கள்? சில பெரிய மனிதர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றிக்கொண்டனர்.” என்று கூறினார். 

அத்துடன் சாதாரண மனிதர்கள் வங்கிகளில் கடன் கேட்கும் போது நிராகரிக்கப்படுவதாகவும், ஆனால் வசதி படைத்தவர்கள் எளிதாக அதிக கடன் தொகையை பெறுகின்றனர். அதேபோல் எளிய மக்கள் வாங்கிய சிறிய கடனை வங்கிகள் கண்டிப்புடன் வசூலிப்பதாகவும், ஆனால் பெரிய தொகையில் கடன் பெற்ற வசதி படைத்தவர்கள் மாயமாகிவிடுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இதில் வங்கி உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். தான் இந்த விவகாரத்தை விமர்சிக்கவில்லை என்றும், இதற்காக வருந்துவதாகவும் நிதிஷ் தெரிவித்துக்கொண்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதே பணமதிப்பிழப்பை வரவேற்ற நிதிஷ், தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும்போது இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் மோடி தலைமையில் 4 ஆண்டுகள் மத்திய ஆட்சியை நிறைவு செய்த தினத்தன்று அவர் இந்த கருத்தை தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.