I-N-D-I-A கூட்டணி ட்விட்டர்
இந்தியா

”இந்தி தெரியாதா..” டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர்.பாலுவைச் சீண்டிய நிதிஷ்குமார்.. நடந்தது என்ன?

டெல்லியில் நடைபெற்ற I-N-D-I-A கூட்டணி கூட்டத்தில், நிதிஷ்குமாரின் இந்தி விஷய பேச்சு, பேசுபொருளாகி இருக்கிறது.

Prakash J

டெல்லியில் நடைபெற்ற 4வது கூட்டம்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதற்குப் பின் போபாலில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே 5 (மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா) மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இக்கூட்டணியின் 4வது கூட்டம் நேற்று (டிச.19) டெல்லியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் தொகுதிப் பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டி.ஆர்.பாலுவைச் சீண்டிய நிதிஷ்குமார்

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது திமுக தரப்பில் ஆங்கில மொழி பெயர்ப்பு கேட்கப்பட்டது. காரணம், இதற்கு முந்தைய 3 கூட்டங்களிலும் நிதிஷ்குமாரின் பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் காரணமாகவே, இந்த முறையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி மனோஜ் ஜாவிடம் டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார். மனோஜ் கேஷாவிடம், ’நிதிஷ்குமார் இந்தியில் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சொல்லுங்கள்’ என்று டி.ஆர்.பாலு கூறியதாகத் தெரிகிறது.

இந்த விஷயத்தை அந்த எம்.பி. நிதிஷ்குமாரிடம் சென்று சொன்னதும், அவர் எரிச்சல் அடைந்துவிட்டார். ’இந்தி தேசியமொழி. டி.ஆர்.பாலு எத்தனை வருடம் அரசியலில் இருக்கிறார். எம்.பியாக பலமுறை இருந்துள்ளார். அவருக்கு இந்தி தெரியத்தானே செய்யும். தெளிவாக புரிய வேண்டும் என்றால், இந்தி படிக்கச் சொல்லுங்கள்’ என்று நிதிஷ் கூறியதாக தெரிகிறது. நிதிஷ்குமாரின் இந்த ஆவேசம்தான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. எனினும் இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.பி. டி.ஆர்.பாலு ஆகிய இருவருமே நிதிஷ்குமார் பேசியதற்கு எத்தகைய ரியாக்‌ஷன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து அவர்கள் இன்னும் வெளியில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

இதையும் படிக்க: எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து சஸ்பெண்ட்: மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு!

நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பதிவு

எனினும், இந்த விஷயத்தில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, திமுகவைக் கடுமையாச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் I-N-D-I-A கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறது திமுக. தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் திமுக, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும் மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதிகாத்தது என்?

தமிழைவிட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி ஹிந்திக்கு அடிமையாகிவிட்டதா திமுக? கூட்டணிக்காக தமிழ்மொழியை அடகுவைக்க துணிந்துவிட்டதா திமுக? உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் I-N-D-I-A கூட்டணியைவிட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ்குமார் கட்சியை I-N-D-I-A கூட்டணியைவிட்டு வெளியேற்ற முனைந்திருக்கும். ஆனால், ஹிந்திக்கு குடைபிடித்து, சாமரம் வீசி, தமிழைப் புறந்தள்ளும் திமுகவிற்கு இனியும் தமிழ்குறித்துப் பேசும் தகுதி இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பெங்களூரு: இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம்... சுவாரஸ்யமான பின்னணி!

நிதிஷின் கோபத்திற்குக் காரணம் என்ன?

முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் லோக்சபா தேர்தலில் ’I-N-D-I-A’ கூட்டணிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் முகமாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தனர். ஆனால், கூட்டம் முடிந்து பிறகு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ”எங்களின் இலக்கு வெற்றிதான்; வெற்றிக்குப் பிறகுதான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்ற பின், எங்களிடம் போதுமான எம்பிக்கள் இருப்பார்கள். அதன்பின் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

I-N-D-I-A கூட்டணி, நிதிஷ்குமார்

அதேநேரத்தில், பிரதமர் வேட்பாளர் விஷயத்தில், நிதிஷ்குமார் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தம்மை எல்லோரும் தேர்ந்தெடுப்பர் என கனவில் இருக்கும் அவருக்கு, மம்தா மற்றும் கெஜ்ரிவாலின் ஆதரவு திடீர் என காங்கிரஸ் பக்கம் திரும்பி இருப்பதால் அவர் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் நேற்றைய கூட்டத்தில் ஆவேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூன் மாதம், பாட்னாவில் ’I-N-D-I-A’ கூட்டணியின் முதல் கூட்டத்தை நடத்தி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டவர் நிதிஷ்குமார். ஆனால் சமீபகாலமாக, ’I-N-D-I-A’ கூட்டணியில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும் அதன்காரணமாகவே அவர் வருத்தத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து I-N-D-I-A’ கூட்டணி கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!