பீகார் முதல்வர் நிதீஷ் குமார், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன்கூட முதல்வர் பதவிக்காக கைகோர்ப்பார் என்று பாஜக எம்பி ஷெடி பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்
இது தொடர்பாக பேசிய ஷெடி பாஸ்வான், "பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை வழங்கியதன் மூலம் பாஜக உயர்மட்ட தலைமை மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இதனால் பாஜக எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி மற்றும் தொண்டர்களின் மதிப்பு பீகாரில் முற்றிலும் பூஜ்ஜியமாக உள்ளது " என்று கூறினார்.
மேலும் அவர், " நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவிக்காக தாவூத் இப்ராகிமுடன்கூட கைகுலுக்கக்கூடியவர். அவர் கடந்த காலத்தில் அதையே செய்தார், மீண்டும் செய்யலாம். நிதீஷ் குமாரும் அவரது கட்சியினரும் பாஜகவுடன் பேரம் பேசுவதற்கும், மிரட்டுவதற்கும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளை எழுப்புகின்றனர். பாஜகவின் உயர்மட்ட தலைமை இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அமைச்சரவையும் நிராகரித்தபோதும், இன்னும் நிதிஷ் குமாரின் கட்சித் தலைவர்கள் அதை எழுப்புகின்றனர். மத்திய அரசு ஏற்கனவே மாநிலத்திற்கு சிறப்பு தொகுப்பை வழங்கியிருந்தாலும், பீகாரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நிதீஷ் குமார் மோடி அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார். பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி கொடுத்தாலும், கூட்டணி தர்மத்தை மீறி அவர் மத்திய அரசிடம் பேரம் பேசுகிறார்'' எனக் கூறினார்.