சந்திரபாபு நாயுடு - நிதீஷ் குமார் முகநூல்
இந்தியா

எம்.பி-க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை... நிதீஷ் குமார் போட்ட கண்டிஷன்... பாஜகவுக்கு புது சிக்கல்?

மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஜக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கிங் மேக்கர்களாக இருப்பதால், பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமானால், ஒரு சில நிபந்தனைகளை பாஜக நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த சூழலில், மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்தான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்றி, தனிப்பெரும்பானமை பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த சூழலில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில், தனிப் பெரும்பான்மையை இழந்திருப்பதால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜக ஆட்சி அமைக்கப்பட முக்கிய தேவைகளாக இருக்கின்றன.

இந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக டெல்லி நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூட்டணி கட்சி தலைவர்களான நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் முக்கியமான துறைகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை பாஜக செய்யும்பட்சத்திலேயே, தங்களின் முழு ஆதரவும் அவர்களுக்கு என்ற நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

சந்திரபாபு நாயுடு

16 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் தெலுங்கு தேசத்தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சி முக்கிய நபர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், 3 கேபினட் அமைச்சர்கள், 3 இணை அமைச்சர்கள் பதியையும், துணை சபாநாயகர் பதவியையும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, வேளாண்மை, ஐடி, நீர்வளத்துறைகளை கேட்டிருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக தற்போது தன் எம்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதன்முடிவில் மேலும் அவர் சில நிபந்தனைகள் வைக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

நிதீஷ் குமார்

மேலும், 12 மக்களவை தொகுதிகளை வென்றிக்கும் ஜக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தும், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று கோரிக்கையும், ரயில்வே துறையும் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி 3 கேபினட் அமைச்சர்கள், 2 இணை அமைச்சர்கள் என 5 மத்திய அமைச்சர் பதவிகளை நிதீஷ் குமார் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் மற்ற கூட்டணி கட்சியான 2 எம்பிக்களை கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி குமாரசாமியும் வேளாண் துறை பதவியை கேட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் மகராஷ்டிராவில் முதல்வாராக இருப்பதால் ஏக்நாத் ஷிண்டே எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், வருகிற ஜூன் 8 ஆம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க விருப்பதால், ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்கவிருந்த சந்திரபாபு நாயுடு தனது பதவியேற்பு விழாவை வருகிறது ஜூன் 12 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மோடிக்கு ஆதரவாக இருந்தாலும், அதுவும் நிபந்தனைக்குட்பட்டே என்பதில் இரு முதல்வர்களும் தெளிவாக இருக்கின்றனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!