தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் அருகே இன்று மாலை கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கிமீ வரை காற்று வீசியது.
சில இடங்களில் 120 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது 23 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா, அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அடியொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக நேற்று வலுப்பெற்றது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரை நிசர்கா புயல் பெரிதாகச் சூறையாடும் என அச்சம் ஏற்பட்டது. ஆனால் நல் வாய்ப்பாக மும்பைக்கு எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை.