நிர்மலா சீதாராமன், பரகலா பிரபாகர் ட்விட்டர்
இந்தியா

”மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது” - எச்சரிக்கை விடுத்த நிர்மலா சீதாராமனின் கணவர்!

”மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது” என நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் வருகின்றனர். இந்தப் பரப்புரையில் ஒவ்வொரு கட்சியும் மாறிமாறி எதிர்தரப்பு குறித்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ”மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

இதுகுறித்து அவர் பேட்டி அளித்திருக்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ”வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்னைபோல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். ‘இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்பது போன்ற வெறுப்புப் பேச்சுகளை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: புதிய உச்சம் தொட்டது இந்திய குடும்பங்களின் கடன் மதிப்பு.. குறைந்தது சேமிப்பு.. ஆய்வில் தகவல்!

மத்திய பாஜக அரசில் அங்கம் வகிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் இவர், ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், ”தேர்தல் பத்திரங்கள் இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஊழல்” என கருத்து தெரிவித்திருந்தார். தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது.

அத்துடன் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், கடந்த நான்காண்டுகளில் (ஏப்ரல் 2019 முதல் 15 பிப்ரவரி 2024) தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்ச நன்கொடையைப் பெற்ற கட்சியாக பாஜக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ.6,986 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாகவும் எஸ்பிஐ அளித்த தகவல்களின்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

இதையும் படிக்க: 'தில்லுமுல்லு' பட பாணி: பொய் சொல்லி மேட்ச் பார்க்க லீவு.. நேரலையில் மேலாளரிடம் சிக்கிய RCB ரசிகை!