நிர்மலா சீதாராமன், அன்னா செபாஸ்டியன் எக்ஸ் தளம்
இந்தியா

பணிச்சுமையால் உயிரிழந்த இளம்பெண்.. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிர்மலா சீதாராமன்.. குவிந்த கண்டனம்!

அன்னா செபாஸ்டியன் பேராயில் உயிரிழந்தது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்ச்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர், அன்னா செபாஸ்டியன் பேராயில். 26 வயது இளம்பெண்ணான இவர், பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கில் (EY) பட்டயக் கணக்காளராக, கடந்த மார்ச் 19ஆம் தேதி பணிக்குச் சேர்ந்தார். அடுத்த நான்கு மாதத்தில், அதாவது கடந்த ஜூலை 20ஆம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன், கட்டிலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அன்னா உயிரிழந்து 2 மாதங்களாகும் நிலையில், அவர் பணிபுரிந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு அன்னாவின் தாயார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், அந்த நிறுவனத்தின் அதிக பணிச் சுமையாலே தன் மகள் உயிரிழந்ததாகவும், அவருடைய இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்தக் கடிதம் இணையத்தில் எதிர்வினையாற்றியது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். இதையடுத்து எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அந்த தாயாரின் கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தது. அதற்குப் பிறகு எர்னஸ்ட் அண்ட் யங் (EY) இந்திய தலைவர் ராஜீவ் மேமானி எழுதிய பதிலில், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் நிறுவன ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதாகவும், அவர்களின் அக்கறையில் பங்கெடுக்க உறுதிகொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் மத்திய அரசும் தலையிட்டு, விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா | 19 வயதில் பட்டத்தைத் தட்டிச் சென்ற குஜராத் அழகி!

இந்த நிலையில் அன்னா செபாஸ்டியன் பேராயில் உயிரிழந்தது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்ச்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், ”சிஏ படித்த பெண் ஒருவர், நிறுவனம் ஒன்றில் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் இறந்ததாக சமீபத்தில் செய்தி ஒன்றுவந்தது. நீ எவ்வளவு படித்தாலும் என்ன வேலை செய்தாலும் மனதில் ஏற்படும் எவ்வளவு பெரிய அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடிய உள்சக்தி வர வேண்டும். அது தெய்வீகம் மூலமாகத்தான் வரும். இறைவனை நம்பு, இறைவனை நாடு என பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். ஆன்மீக சக்தி வளர்ந்தால்தான் அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்கு உள்சக்தி வளரும். கல்வி நிறுவனங்கள் ஆன்மீகத்தை சொல்லித்தர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அவர், அந்தப் பெண்ணைக் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும், மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

நிதியமைச்சரின் இந்தக் கருத்துக்கு,சிவசேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, கேரள கம்யூனிஸ்ட் எம்.பி சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.