இந்தியா

``மத்திய பட்ஜெட், `இந்தியா 100’ என்ற இலக்கில் தயாரிக்கப்பட்டது”-அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிவேதா ஜெகராஜா

கடந்த 2008-09 ம் நிதியாண்டில் குறைவான பொருளாதார நெருக்கடியின்போது, பணவீக்கம் 9.1 சதவிகிதமாக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அது 6.2 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிலையான, நீடித்த பொருளாதார மீட்சியை பட்ஜெட் நோக்கமாக கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் முடிவு நாட்டின் விவசாயத் துறையை நவீனப்படுத்தும் கருவியாக இருக்கும். `இந்தியா 100’ என்ற இலக்கை நோக்கி, அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் ஆகும் என்ற நிதர்சனத்தின் அடிப்படையில், `இந்தியா 100’ என்ற இத்திட்டம் வகுக்கப்பட்டது.

100 நாள் வேலை திட்டத்தில் உயிருடன் இல்லாதவர்களும் பணம் பெறுவது உள்ளிட்ட ஊழல்கள் நடந்ததாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்து நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஏழைகளுக்கு ஊதியமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் உரங்கள் விலை கடுமையாக உயர்ந்தபோதிலும் விவசாயிகள் பாதிக்காத வகையில் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. `பிரதமரின் கதி சக்தி’ திட்டத்தில் ரூ.7.5 லட்சம் கோடி செலவழிப்பு மூலம் நாட்டின் கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் பெறும். கோடிக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும்.” என நிதியமைச்சர் தெரிவித்தார்.