மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனக்கூறி, கர்நாடகத்தின் அனைத்து எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் மற்றும் எம்பிக்கள் இணைந்து வரும் 7 ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் கர்நாடகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் கர்நாடகம் பின்னடைவை சந்தித்துவருவதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இருந்து இக்குரல் வரும்நிலையில், தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் கர்நாடக அரசுக்கு போதிய நிதி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. இதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை. மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கும் பணியை நிதிக்குழுதான் மேற்கொண்டு வருகிறது.
நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. நிதிக்குழுவினர் அனைத்து மாநிலங்களுக்கும் செல்கின்றனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. நிதிக்குழுவின் பரிந்துரைகளே நான் அறிவிப்பது” என்று தெரிவித்தார்.