கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் தொடர் கேள்விகளாலும் அமளியாலும் 4 நாட்களாக முடங்கியது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றியும் மணிப்பூர் கலவரம் பற்றியும் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு ஆளும் தரப்பு “இது குறித்து விவாதிக்க தயார்” என்று கூறினாலும், எதிர்க்கட்சிகள் “பிரதமர் விளக்கமளித்த பின்பே விவாதம் நடைபெறும்” என வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசிய போது ஒலிப்பெருக்கி அணைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தது. இதையடுத்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது அவரது மைக் அணைக்கப்படவில்லை என விளக்கம் கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஒரு கட்சியின் தலைவரும் மாநிலங்களவையின் மூத்த உறுப்பினருமான நான் உரையாற்றும் போது மைக் அணைக்கப்பட்டது எனது சுயமரியாதையை அவமானப்படுத்தும் செயல்” என கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மோசடி பேர்வழி” என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தொடங்கியது. இதையடுத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்து “எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பிரதமரின் மீதும், பிரதமர் தலைமையிலான மத்திய அரசு மீதும் கண்ணியமற்ற முறையில் பேசி வருகிறது. அவையில் ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினரை எவ்வாறு இப்படி சொல்ல முடியும்? இதனை கடுமையாக கண்டிக்கிறோம். அவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறினார்.
நிர்மலா சீதாராமன் பேசிய பிறகும் தொடர்ந்து அதே வார்த்தையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டன. அப்போது, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று “மோடி!! மோடி!!” என எதிர் கோஷம் எழுப்பினர். இதனால் மாநிலங்களவையில் கடும் அமளி நீடித்தது.
இதையடுத்து “ஒவ்வொரு உறுப்பினர்களும் அவையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என எச்சரித்து மாநிலங்களவையை ஒத்தி வைத்தார் தலைவர். அவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியவற்றை, இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.