மமதா பானர்ஜி, ஆஷா தேவி ani
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை | ”ஆளும்கட்சி போராட்டம் ஏன்?” மம்தாவை சீண்டிய நிர்பயாவின் தாயார்!

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற போராட்டத்தில் மர்மக் கும்பல் ஒன்று அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. வன்முறையாக மாறிய இந்தப் போராட்டத்தில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. என்றாலும், இந்த மருத்துவமனை தாக்குதல் சம்பவத்துக்கு, மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசையும் மாநில காவல்துறையையும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனிடையே, மருத்துவர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை வழங்ககோரி முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று (ஆக.16) பேரணி நடத்தியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிக்க; 2025 IPL|தோனியைத் தக்கவைக்கப் போராடிய CSK.. எதிர்த்த காவ்யா மாறன்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன?

இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி நிலைமையை கையாள தவறிவிட்டார் எனவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றஞ்சாட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இந்தப் பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மம்தா பானர்ஜி போராட்டம் நடத்துகிறார். மாநில முதல்வர் என்ற பொறுப்பை பயன்படுத்தி குற்றஞ்சாட்டவர்கள் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சூழ்நிலையை கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்.

பாலியல் வன்கொடுமை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக தண்டனை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டும்வரை, இதுபோன்ற கொடூரச் செயல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கும். கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் நடந்துள்ளது என்றால், நாட்டின் பிற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

2012 டிசம்பர் 16ஆம் தேதி, ’நிர்பயா’ என்று பெயரிடப்பட்ட பெண் ஒருவர், டெல்லி பேருந்து ஒன்றில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முடா முறைகேடு|அதிகாரத்தை கையில் எடுத்த ஆளுநர்.. மறுக்கும் முதல்வர்.. கர்நாடக அரசியலில் புயல்!