இந்தியா

‘பள்ளிக் கொடுமைகளைத் தெரிவிக்க ஒரு செயலி’ - 4ம் வகுப்பு மாணவியின் கண்டுபிடிப்பு

‘பள்ளிக் கொடுமைகளைத் தெரிவிக்க ஒரு செயலி’ - 4ம் வகுப்பு மாணவியின் கண்டுபிடிப்பு

webteam

ஒன்பது வயது சிறுமி ஒருவர் பள்ளியில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு செயலியை உருவாக்கியுள்ளார்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மெய்தைபாஹுன் மஜாவ். இவர் தனக்கு எதிராக பள்ளியில் நடந்த சில கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே அது தொடர்பாக தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளார். இந்தக் கொடுமையை எப்படி தடுப்பது? தம்மை போன்று பாதிக்கப்படுபவர்களுக்கு யார் உதவுவது? என அவர் யோசித்துள்ளார்.

ஆகவே, இந்தத் தொடர் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு தீர்வை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மெய்தைபாஹுன் மஜாவ் ஈடுபட்டுள்ளார். அதற்கான வெற்றியின் அடையாளமாக ஒரு செயலியை அவரே கண்டுபிடித்துள்ளார். இந்தச் செயலி, புகாரை எந்த நபர் தெரிவிக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளுக்கு புகாரளிக்கும்படி அவர் உருவாக்கியுள்ளார். இந்தச் சின்னஞ்சிறு வயதில் 4 ஆம் வகுப்பே படிக்கும் மாணவியான இவர், ஒரு செயலியைக் கண்டுபிடித்துள்ளது இப்போது பெரிய செய்தியாகி உள்ளது.

‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ1 கோடி’ - ஜாக்கிசான் உருக்கமான பதிவு

“நான் நர்சரியில் இருந்தே பள்ளியில் நடைபெறும் கொடுமைகளை அனுபவித்து வந்தேன். அது என்னைப் பாதித்தது. ஆகவே நான் அதை வெறுக்கிறேன். இதனால், நான் எப்போதும் ஒரு தீர்வைத் தேடிக்கொண்டே இருந்தேன். வேறு எந்தக் குழந்தைக்கும் இந்தப் பாதிப்பு வரக்கூடாது” என்று மஜாவ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கூகுள் பிளேயில் விரைவில் இந்தச் செயலி கிடைக்க உள்ளது. இதனை வைத்து தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்கள், ஆசிரியர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக புகாரளிக்கலாம். இவரது முயற்சியை மாநில கல்வி அமைச்சர் லக்மென் ரிம்புய் பாராட்டியுள்ளார். இவர் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக வளர்வார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக இருப்பார். அவளுக்கு வழிகாட்டியதற்காக அவரது பெற்றோர்களையும் வாழ்த்துகிறேன்" என்று ரிம்புய் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மெய்தைபாஹுன் மஜாவ் ஒரு ஆப்-டெவலப்மென்ட் படிப்பில் சேர்ந்ததாகவும், சில மாதங்களுக்குள்ளேயே அதன் திறன்களைக் கற்றுக்கொண்டு அவள் தேறிவிட்டதாகவும் அவரது தாயார் தசுமார்லின் மஜாவ் கூறினார்.