மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறவுள்ள நிலையில் புதிதாக இடம்பெறவுள்ள 9 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 பேரும் பதவியேற்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா புறப்படும் முன் மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நாளை மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. நாளை மாற்றி அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10.30 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அஸ்வினிகுமார், ஷிவ் பிரதாப், வீரேந்திர குமார், அனந்த்குமார், ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திரசிங் ஷெகாவத், சத்யபால்சிங், அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பு என்று அறிவிக்கப்படவில்லை.
இவர்களை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். பதவியேற்புக்கு முன்பாக இந்த 9 பேரும் காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கின்றார்கள்.
முன்னதாக அமைச்சரவை விரிவாக்கத்தையொட்டி 6 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.