இந்தியா

இருமல் மருந்து குடித்ததால் 9 குழந்தைகள் உயிரிழப்பு: அது என்ன மருந்து?

webteam

இருமல் மருந்தால் 9 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக, பல மாநிலங்களில் அந்த மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் அடுத்தடுத்து 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது குழந்தைகளின் உயிரை பறித்தது, COLDBEST-PC எனும் இருமல் மருந்து என்பது கண்டறியப்பட்டது. அதில், DIETHYLENE GLYCOL என்‌னும் துணை வேதிப்பொருள் இருந்ததும் அதனால் மருந்தில் விஷத்தன்மை கூடியதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. COLDBEST-PC மருந்தை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நிறுவனம் தயாரித்தாலும் அதன் வேதிப்பொருட்கள் சென்னையை அடுத்த மணலியில் தயாரிக்கப்பட்டதாகும்.

மருந்து உற்பத்தி தொடங்குவதற்கு முன் வேதிப்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தாததே உயிரிழப்புக்கு காரணம் என அதிகாரிகள் கூறினாலும் இதுபோன்றவை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. உயிரிழப்புகள் நிகழ்ந்த பின்னர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமத்தை திரும்பப்பெற்றது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், 'வருமுன் காப்போம்' என்பதை அதிகாரிகள் பின்பற்றாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.

தற்போது, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் COLDBEST-PC மருந்தின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைனில் கிடைக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

'உணவே மருந்து' என்பது மாறி உணவுக்கு முன், பின் என மருந்துகளை பிரித்து உண்ணும் நிலையில் மனித இனம் உள்ளது. இதுபோன்ற சூழலில் மருந்துகளை வெறும் வேதிப்பொருட்களாக மட்டுமே கருதுவது மாபெரும் தவறு என்பதையே 9 குழந்தைகளின் உயிரிழப்புகள் உணர்த்துகின்றன.