இந்தியா

நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது !

நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது !

webteam

யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உள்ளதால் மறு உத்தரவு வரும்வரை அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீலகிரியில் சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உள்ளிட்ட சில பகுதிகளில் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து  ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, யானைகளின் வழித்தடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை முழுமையாக மூட உத்தரவிட வேண்டும்" என்று வாதிடப்பட்டது. மேலும் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டுமென்றும், உறுதி செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் அக்கற்றப்பட வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் விரிவான விசாரணையை ஜனவரி மாதம் ஒத்தி வைத்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா பல்வேறு பணிகளை செய்து வருவதால் மறு உத்தரவு வரும்வரை இன்னசன்ட் திவ்யாவை வேறு எங்கும் இடமாற்றம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.