Father pt desk
இந்தியா

‘ராத்திரிதான் வீடியோ கால்ல பேசுனா... இப்படி ஆயிருச்சே...’ மகளின் முகத்தை காண காத்திருக்கும் தந்தை

29ஆம் தேதி இரவு 8 மணிக்கு கேரளாவில் இருந்து தன்னிடம் வீடியோ காலில் பேசிய 9 வயது மகள் நிலச்சரிவுக்குப்பின் தற்போது வரை இருக்கும் இடம் தெரியவில்லை. மகளுக்காக ஏக்கத்தில் கண்ணீருடன் காத்திருக்கும் தந்தை.

webteam

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு கோட்டூர் பகுதியில் வசித்து வரும் சாமிதாஸ், ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவருக்கு 9 வயதில் ஆனந்திகா என்ற மகள் இருந்த நிலையில், சூரல்மலை பகுதியைச் சேர்ந்த இவரது மனைவி, ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து சாமிதாஸ், தனது மகளுடன் எருமாடு பகுதியில் வசித்து வந்தார்.

சிறுமி ஆனந்திகா

இந்நிலையில், தனது தாத்தா பாட்டியுடன் தங்கி படிக்க வேண்டும் என மகள் ஆனந்திகா ஆசைப்பட்டதை அடுத்து சூரல்மலையில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு தந்தை சாமிதாஸ் உடன் மகள் ஆனந்திகா வீடியோ காலில் பேசி இருக்கிறார். அதன் பிறகு சூரல்மலை பகுதியில் பேரிடர் ஏற்பட்டதை அறிந்த தந்தை சாமிதாஸ், மகளை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

ஆனால், மகளை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் எருமாடு பகுதியில் இருந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு போய் பார்த்தபோது, அவரது மகள் தங்கியிருந்த வீடு இருக்கும் இடம் தெரியாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டில் இருந்த அவரது மகள், மாமியார் மாமனார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 6 பேரும் காணாமல் போயிருந்தனர். அதில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மகள் ஆனந்திகா, மாமனார், மாமியாரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

Relatives

இந்நிலையில், தனது மகள் மற்றும் உறவினர்களின் உடல்கள் கொண்டு வரப்படுகிறதா என வழிமேல் விழிவைத்து பார்த்தபடி மருத்துவமனை முன்பு அமர்ந்திருக்கிறார் சாமிதாஸ். தனது மகளின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமோ என்ற ஏக்கத்தில் அவர், மருத்துவமனை முன்பு அமர்ந்திருப்பதை பார்ப்போர் நெஞ்சமும் கணக்கிறது.

சூரல்மலை பகுதியில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்படுகிறது என்பதால், அங்கு தனது மகளின் உடல் உள்ளதா என விசாரித்து வரும் சாமிதாஸ், தனக்கு உதவிட இங்கு யாரும் இல்லாத நிலையில், தமிழக அரசு தனது குழந்தையின் உடலையாவது மீட்டுத் தர உதவ வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.