இந்தியா

காவல்துறையினருக்குப்  பெட்டிப் பெட்டியாக சானிடைசர் பாட்டில்களை வழங்கிய நடிகர்

காவல்துறையினருக்குப்  பெட்டிப் பெட்டியாக சானிடைசர் பாட்டில்களை வழங்கிய நடிகர்

webteam
தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்,  கைகளைச் சுத்தப்படுத்தும் ஆயிரக்கணக்கான  சானிடைசர் பாட்டில்களை காவல்துறையினருக்கு  நன்கொடையாக அளித்துள்ளார்.
கோவிட் -19 வைரஸ் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதனை எதிர்த்துப் போராடும் வகையிலும், தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல நாடுகள் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.  மேலும் தொற்று பரவுவதைத் தடுக்க, தனிமைப்படுத்தலின் அவசியத்தை மக்களுக்கு அரசு எடுத்துக் கூறி வருகிறது.  மேலும் சமூக பரவல் மூலம் நோய் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வோரைத் தவிர மற்றவர்கள் யாரும் வெளியே நடமாடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டி அவர்களின் சேவையை மனதில் கொண்டு, தெலுங்கு நடிகர் சித்தார்த், அவர்களுக்கு கைகளைச் சுத்தப்படுத்தும்  சானிடைசர் பாட்டில்களை  இலவசமாக அளித்துள்ளார்.  இது குறித்து  நிகில், அவரது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், '' இந்த சானிடைசர் பெட்டிகள் நன்றிக் கடனை செலுத்துவதற்காக உள்ளன. எங்களைப் பாதுகாக்கும் பணியில் முன் வரிசையில் நிற்கும் எங்களது காவல்துறையினருக்கு வழங்கப்பட உள்ளது. அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்” எனக் கூறியுள்ள அவர் #fightagainstcoronavirus  என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான சண்டையில் வெற்றி கைகளில்தான் உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  
இவர் பகிர்ந்துள்ள பதிவில் , பெட்டிப் பெட்டியான சானிடைசர் பாட்டிகள் உள்ளதைக் காண முடிகிறது.  கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இந்த நடிகர் ஏற்கனவே பல நன்கொடைகளை  அளித்தார்.  N95 முகக்கவசங்கள், கையுறைகள்,பாதுகாப்பு கண்ணாடிகள், சுத்திகரிப்பு பொருட்கள் என அனைத்தும் தலா இரண்டாயிரம் வழங்கியுள்ளார். இவரது சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.