கையில் வாள் ஏந்தியபடி, டெல்லி டிராக்டர் பேரணியில் குதிரையில் வலம் வந்த நிஹாங் சீக்கியர்கள் கவனம் ஈர்த்தனர். அவர்களது புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு, 'காலிஸ்தான் தீவிரவாதிகள்' என்று தவறான தகவல்கள் பகிரப்பட்டதையும் கவனிக்க முடிந்தது. இவர்களின் பின்னணியைப் பார்ப்போம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராடிய விவசாயிகள் செவ்வாய்க்கிழமை டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி நுழைய முயன்ற விவசாயிகளைத் தடுக்கும் வண்ணம் டெல்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர்.
இருந்தபோதிலும் முன்னேறி சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, கோட்டையின் வாசலில் இருந்த கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றினர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் படுகாயமடைந்த விவசாயி நவ்நீத் (45 வயது) உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்றைய விவசாயிகளின் போராட்டத்தில் கவனம் ஈர்த்த செயல், நிஹாங் சீக்கியர்களின் ஈடுபாடு. குதிரையின் மீது அமர்ந்துகொண்டு நீல நிற உடையில் கையில் வாளோடு காவல்துறையிடனரிடம் இருந்து டிராக்டர் பேரணியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த நிஹாங் சீக்கியர்கள். சிங்கு எல்லைக்கு அருகில் இருந்த இந்த நிஹாங் சீக்கியர்கள் இன்று டெல்லியை நோக்கிச் சென்றனர்.
நிஹாங் சீக்கியர்கள் யார்?
நிஹாங் என்ற வார்த்தையின் வேர் பாரசீக மொழியில் இருந்து வந்துள்ளது. முகலாய வரலாற்றாசிரியர்கள் நிஹாங்ஸ் - அல்லது குரு டி லாட்லி ஃபவுஜ் (குருவின் அன்புக்குரிய ராணுவம்) சீக்கிய வீரர்களின் மூர்க்கத்தனத்தை முதலைகளுடன் ஒப்பிட்டதாக நம்பப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோபிந்த் சிங் என்பவரால் நிறுவப்பட்ட கல்சா பந்தில் நிஹாங் சீக்கியர்கள் தோன்றியுள்ளனர். மேலும் குரு ஹர்கோபிந்தின் அகல் சேனாவிலிருந்து வெளிவந்ததாகவும் நம்பப்படுகிறது.
நிஹாங் சீக்கியர்கள் அணியும் நீல நிறம், குரு கோவிந்த் சிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக, அவர்கள் தங்கள் மணிக்கட்டில் ஜங்கி காரா எனப்படும் இரும்பு வளையல்களையும், தலைப்பாகையில் எஃகு டிஸ்க்குகளையும் அணிந்துகொள்கிறார்கள். பாரம்பரியமாக, அவர்கள் ஒன்று அல்லது இரண்டு வாள்களையும் கையில் வைத்திருப்பது வழக்கம்.
நிஹாங்குகள் சீக்கிய சமுதாயத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்படுகிறார்கள். குறிப்பாக கிராமங்களில் மோதல் அல்லது போராட்டக் காலங்களில் மக்களையும் நம்பிக்கையையும் பாதுகாப்பது தங்கள் கடமையாக அவர்கள் கருதுகிறார்கள். இதன் விளைவாக, நிஹாங் சீக்கியர்கள் பெரும்பாலும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் அவர்களின் பாதுகாப்பாக இருந்து வரும் நிஹாங் சீக்கியர்கள் இன்றைய போராட்டத்தில் போலீசிடமிருந்து மக்களை காப்பாற்றி இருப்பதாக சொல்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்.
- படங்கள் உறுதுணை: The Quint