இந்தியா

தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ

தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ

ஜா. ஜாக்சன் சிங்

ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தனிப்படை அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர நகரைச் சேர்ந்தவர் கன்னையா லால். தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருக்கும் இவர், அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்னையா லால் பேசியிருந்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சூழலில், அவரது கடைக்கு நேற்று காலை வந்த இரண்டு நபர்கள் கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனர். மேலும், இதனை வீடியோ எடுத்தும் அவர்கள் வெளியிட்டனர்.

இந்த சம்பவம் உதய்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னையா லால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உதய்பூரில் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. உதய்ப்பூர் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் முழுவதுமே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் போராட்டக்கார்ரகள் கடைகள், வீடுகள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் மாநிலத்தில் பெரும் பதற்றமான சூழல் உருவானது.

இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ராஜஸ்தான் முழுவதும் 144 தடை உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கன்னையா லாலை கொலை செய்த 2 பேரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.


தீவிரவாத சம்பவமா?

இந்நிலையில், கன்னையா லால் கொலை செய்யப்பட்டது ஒரு தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரிப்பதற்காக என்ஐஏ தனிப்படை அதிகாரிகள் இன்று உதய்பூர் சென்றுள்ளனர். கன்னையா லால் கொல்லப்பட்ட விதம், ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்யும் பாணியை ஒத்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்பேரில், என்ஐஏ தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான் அனுப்பப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.