NIA pt desk
இந்தியா

காலிஸ்தான் பிரிவினைவாத கும்பல்களை குறிவைத்து வட இந்திய மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் உள்ளிட்ட 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.

webteam

கனடா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாத கும்பல்களின் தலைவர்கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், போதைப் பொருட்கள் கடத்தல், ஆட்கடத்தல் போன்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கும்பல்களுடன் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது.

காலிஸ்தான் கொடி

இதையடுத்து இந்தியாவில் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் பலர் கனடா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி உள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள சட்டவிரோத கும்பல்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவில் நிழல் உலக தாதாக்கள் மூலம் ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மற்றும் மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என கனடா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய தீவிரவாத ஆதரவாளர்கள் மற்றும் சட்டவிரோத கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா ஆதாரங்களை சமர்ப்பித்து கனடா நாட்டிடம் கோரிக்கை வைத்துள்ளது.

NIA

இந்த நிலையில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத கும்பல்களை மடக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.