இந்தியா

புல்வாமா தாக்குதல் சம்பவம் - 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

புல்வாமா தாக்குதல் சம்பவம் - 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

webteam

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த வீரர்களின் உடல்கள் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு வீரர்களின் உடல்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். வீரர்கள் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் அஞ்சலி செலுத்த உள்ளார்.

பயங்கரவாதிகள் எப்படி தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து சிஆர்பிஎப் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “கடும் பனிப்பொழிவு காரணமாக 2 ஆயிரத்து 500 சிஆர்பிஎப் வீரர்களை கொண்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. மற்றொரு புறம் பொதுமக்கள் செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் வாகனங்கள் போன்ற போர்வையில் சென்ற வாகனங்கள்தான் தீவிரவாத தாக்குதலை நடத்தியது” என தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இன்னும் யாரேனும் பயங்கரவாதிகள் உள்ளனரா என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புல்வாமா பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 4 நபர்களை பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.