நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், 19 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி ஒன்றில் அனிகா ரஸ்தோகி என்ற 19 வயது பெண் தங்கியிருந்து, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவரது நண்பர்கள் அனிகாவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால், அது எதற்கும் பதில் இல்லாததால், போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது அறைக்குச் சென்றுள்ளனர். உள்பக்கமாகக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அதை உடைத்து மயக்க நிலையில் இருந்த அனிகாவை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டனர் எனத் தெரிவித்தனர். அவருடைய உயிரிழப்பு குடும்பத்திலும், நண்பர்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு ராம் மனோகர் லோகியா பல்கலை இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், “அனிகாவின் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்தன. தவிர, அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. சந்தேகம்படும்படி எதுவும் அங்கு நடைபெறவில்லை. கதவும் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. என்றாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த அனிகா ரஸ்தோகி, மகாராஷ்டிரா கேடர் 1998 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார். சஞ்சய் ரஸ்தோகி தற்போது தேசிய புலனாய்வு அமைப்பில் (என்ஐஏ) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். அனிகா ரஸ்தோகி ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலையில் BA LLB மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.