train fire pt desk
இந்தியா

கேரளாவில் தொடரும் ரயில் தீ விபத்து: மாநில அரசிடம் விளக்கம் கேட்ட என்ஐஏ!

கேரளாவில் இன்று அதிகாலையில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் நடந்த தீ விபத்து குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

webteam

கேரள மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் அதிவிரைவு ரயில், கண்ணூர் ரயில் நிலையத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அந்த ரயில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து ரயில் பெட்டிகளில் பற்றிய தீயை போராடி அணைத்தனர் தீயணைப்புத்துறை வீரர்கள். தற்போது சம்பவம் குறித்து ரயில்வே போலீசார், காவல்துறையினர், IB துறையினர் என பலரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

fire

முதற்கட்ட விசாரணையில், இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் கையில் பாட்டிலுடன் ஒருவர் நடந்து செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி அந்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தீப்பற்றி எரிந்த ரயில் பெட்டிகள் பூட்டி இருந்த நிலையில், ஒரு கழிப்பறையின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பாட்டிலுடன் சென்ற நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்களை பிடித்த கண்ணூர் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் இரண்டு மாதங்களில் ஒரே ரயிலில் இரண்டாவது முறையாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் ரயில் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

NIA

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை மத்திய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே என்ஐஏ அதிகாரிகள் கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இச்சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.