இந்தியா

லவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு

லவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு

webteam

கேரள மாநிலத்தை சேர்ந்த ஹாதியா, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் சபி ஜகானை மதம் மாறி காதல் திருமணம் செய்துகொண்டார். தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக ஹாதியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவின் பெற்றோர்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இதையடுத்து ஹாதியா 25 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “நான் ஒரு முஸ்லீம். தொடர்ந்து முஸ்லீமாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார். மேலும், ‘தொடக்கம் முதலே எனது தந்தை சிலரின் உந்துததால் செயல்பட்டு வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவர் மீது அல்ல. எனது பெற்றோர்களும், மற்றவர்களும் இஸ்லாமை கைவிடுமாறும், கணவரை விட்டு வருமாறும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கேரளாவில் காதல் மூலம் மதமாற்றம் நடைபெறுகிறதா என்பதை அறிய தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. அந்த அமைப்பு 89 திருமண மதமாற்ற வழக்குகளில் 11 வழக்குகளை கையில் எடுத்து விசாரித்தது. இதுபோன்ற புலனாய்வில் குறைந்தபட்சம் 3 வழக்குகளையாவது ஆய்வு செய்ய வேண்டும். இருப்பினும் உறுதியான தகவலை அறிவதற்காக சிக்கலான 11 வழக்குகளை எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. அதில் ஹாதியா வழக்கும் ஒன்று. 

இந்த விசாரணையின் முடியில், கேரளாவில் எந்த வித கட்டாய மதமாற்றமும் இல்லை என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே மதமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மற்ற மதத்திற்கு மாறி வாழும் பெண்கள் மற்றும் ஆண்கள் அதை விரும்பியே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.