இந்தியா

யாசின் மாலிக் குற்றவாளி - என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

யாசின் மாலிக் குற்றவாளி - என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

ஜா. ஜாக்சன் சிங்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை குற்றவாளி என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்; தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல்; காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழும் அவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதனிடையே, கடந்த 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் அடுத்தக்கட்ட விசாரணை மே 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீவிரவாத இயங்கங்களுக்கு நிதி வழங்கியதாக யாசின் மாலிக் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கான தண்டனை விவரம் வரும் 25-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.