செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்ட் சாலையில் கம்மணஹள்ளி பகுதியில் உள்ள, ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த மார்ச் 1-ஆம் தேதி இருமுறை குண்டு வெடித்தது. இதில், 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அப்துல் மதீன் அகமது தாகா, முசாவீர் ஹுசைன் சாஜிப் ஆகியோரை கைது செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் பலரது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா, தமிழகம், தெலங்கானா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள, 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹூப்லி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், ஹூப்ளி கசபா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சோயாப் மீர்ஜா, அஜிஜ் அஹமத் மீர்ஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் இருந்து ஐந்து பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு கோவை சென்றனர்.
இதையடுத்து கோவை சாய்பாபா காலனி மற்றும் நாராயண குருசாமி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களான ஜாபர் இக்பால் (39), நயீம் சித்திக் (36) ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், மொபைல் போன் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில், இந்த சோதனை நடந்ததாக தெரியவந்துள்ளது. சோதனைக்குள்ளான இரு மருத்துவர்களும், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.
பெங்களூரு போலீசார் 2012-ல் நடத்திய விசாரணையில், இந்த இரு மருத்துவர்களும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த இருவரும், கோவையில் தங்கி தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், உணவக குண்டுவெடிப்பில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதேபோல் 4 மாநிலங்களில் 11 இடங்களில் நடந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் 11 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.