நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் நாளை மறுநாள் முதல் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை மறுநாள் முதல் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இயங்கவும், ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும் மத்திய உள்துறை அனுமதி அளித்தது.
இதையடுத்து, சுங்கச் சாவடிகளில் நாளை மறுநாள் முதல் கட்டணம் வசூலிப்பதற்கு மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் இந்த முடிவுக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நெருக்கடியான காலத்தில், தேசத்தின் நலன் கருதி, நஷ்டத்துடன் அத்தியாவசியப் பொருட்களை லாரி உரிமையாளர்கள் ஏற்றி வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் குல்தரன் சிங் அகர்வால் கூறியுள்ளார். லாரிகளின் இயக்கச் செலவில் 20% சுங்கக் கட்டணமாகவே செலுத்தப்படுவதாகவும் அகர்வால் தெரிவித்துள்ளார்.