இந்தியா

சென்னை டூ மைசூர் நெடுஞ்சாலையோடு ரயில் பாதைகள்... நிலங்களை கையகப்படுத்தவுள்ள மத்திய அரசு..!

Veeramani

ஒருங்கிணைந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையோடு இணைந்து ரயில் பாதைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிலங்களை கையகப்படுத்தவிருக்கிறது.

அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி சாலை மற்றும் ரயில் போக்குவரத்துத் துறையை சேர்ந்த நான்கு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் செலவை பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பான வழிமுறைகளை உருவாக்குவார்கள்.

இதுபற்றி பேசிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைவர் எஸ்.எஸ். சந்து “ எங்களால் சாலைகள் அருகில் ரயில் பாதைகள் அமைப்பதற்காக 10 முதல் 15 மீட்டர் அகலத்திற்கு நிலங்களை கையகப்படுத்தமுடியும். ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கு திட்டமிடுவது சிறப்பான உள்கட்டமைப்பை உருவாக்கும்” என்றார்

முதல் கட்டமாக ரயில்வே ஆணையம்  7 முக்கிய வழித்தடங்களுக்கான விபரங்களை கேட்டுள்ளது, அந்த விபரங்களை சேகரிக்க சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை முதல் மைசூர் வரையிலான வழித்தடம் பெங்களூரு வழியாக அமைக்கப்படுகிறது. மேலும் டெல்லி முதல் வாரணாசி வரை ஒரு வழித்தடம், வாரணாசி முதல் ஹவுராவுக்கு ஒரு வழித்தடம், டெல்லி முதல் அகமதாபாத் வரையில் ஒரு வழித்தடம், டெல்லி முதல் அமிர்தசரஸ் வரை ஒரு வழித்தடம், மும்பை முதல் நாக்பூர் வரை ஒரு வழித்தடம், மும்பை முதல் ஹைதராபாத் வரையில் ஒரு வழித்தடம் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.