டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரில் புதிய தலைமுறை
இந்தியா

ஆஞ்சநேயர் கோயில் வழிபாடு.. Road Show.. கெஜ்ரிவாலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை டெல்லி கீழமை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நேற்றைய தினம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன்1 ஆம்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு ஆறாவது கட்டமாக மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இச்சூழலில்தான், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டர். இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால், தற்போது இவர் வெளியே வந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட தீவிர நடவடிக்கைகளில் அக்கட்சியினர் இறங்கவுள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இதன்படி, சிறையில் இருந்து வெளியே வந்த போது அவர் கூறிய ஒரே வார்த்தை...சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கும் , மக்களுக்கும் அழைப்பு விடுத்ததுதான்.

இந்நிலையில், இன்றைய தினம் முதற்கட்டமாக காலை 11 மணி அளவில் அனுமன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பிற்பகலில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தலுக்கான முதல் பிரச்சார பேரணியை டெல்லி மெஹரோலி பகுதியில் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், இவர் வெளியில் இருக்கும், இந்த 20 நாட்கள் தீவிர பிரச்சாரமாக இருக்கும் என்றுஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவரின் வருகை அக்கட்சியினருக்கு பெரும் பலத்தை தந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்