இந்தியா

கருவறையில் இருந்து கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

webteam

கேரளாவில் பிறந்து 2 நாளே ஆன குழந்தையை மருத்துவமனையின் கழிவறைக்குள் போட்டு விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் அப்துல் ரஹ்மான் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார்.  அவரது மருத்துவமனையில் உள்ள கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை பணியாளர்கள் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது பந்து போன்ற ஒரு பொருள் தென்பட்டது. அதனை அகற்ற முயற்சி செய்தனர். அந்தப் பொருளை வெளியில் எடுத்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. அது ஒரு பெண் சிசு. தொப்புள் கொடியுடன் காணப்பட்டது. 

இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வெளியில் இருந்து மருத்துவமனைக்கு வந்து யாரோ பிரசவித்து சென்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொப்புள் கொடியுடன் குழந்தை இருப்பதால் மருத்துமனையின் கழிவறையில் பிரசவம் நடைப்பெற்று அதன் பின்னர் குழந்தையை அதற்குள் போட்டுவிட்டு தண்ணீர் ஊற்றிச் சென்றிருக்கலாம் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மருத்துவமனையின் கோப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் இதுவரை குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.