குழந்தை திருமணம் கோப்புப்படம்
இந்தியா

இந்தியா | ‘ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 சிறுமிகள் குழந்தை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்’

“இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 3 சிறுமிகள் குழந்தை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்” என சமீபத்திய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என அனைத்திலும் வளர்ச்சி அடைந்து, தற்போது 21ம் நூற்றாண்டில் நாம் வலம் வந்து கொண்டிருக்கிறோம். இப்படியான நேரத்தில்தான், “இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 குழந்தைகள் ‘குழந்தை திருமணம்’ செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்” என்ற அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இது, உண்மையிலேயே இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்ற கேள்வியையே நமக்கு தருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 21, பெண்களில் திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழ் ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணம் எனப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டினை பொறுத்தவரை, நாடு முழுவதும் ஒரு நாளைக்கு, மூன்று வழக்குகள் மட்டுமே குழந்தை திருமணம் தொடர்பாக பதிவாகியுள்ளது.

ஆனால், சமீபத்தில் ‘குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியா' என்ற அமைப்பின் ஒரு பகுதியான “இந்தியாவில் குழந்தை பாதுகாப்பு” என்ற ஆராய்ச்சி குழு ஆய்வொன்று நடத்தியுள்ளது. அதில் அதிர்ச்சி தரும் சில விஷயங்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆய்வுக்காக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (NCRB) மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வு - 5 (2019-21) ஆகியவற்றின் தரவுகளை கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் முடிவுகளின் படி,

  • தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தில் (NCRB), 2018 - 2022 வரை 3,863 குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன.

  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதாவது தினமும் 4,400 குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.

  • தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS) படி, 20 - 24 வயதிற்குட்பட்ட பெண்களில் 23% பேர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அசாம் குழந்தை திருமணம் தொடர்பான இந்த குழு தெரிவித்தது:

அசாம் குழந்தை திருமணம் தொடர்பாக இந்த குழு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது. அதன்படி, “அசாமில் குழந்தை திருமணம் விகிதம் அதிகரித்து காணப்பட்டதால் அவற்றை உடனடியாக நிறுத்த அம்மாநில அரசு கடுமையான நடவடிக்கையை கடந்த பிப்ரவரியில் மேற்கொண்டது.

இதன்படி, ஓரிரு நாட்களில் 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 2,200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதன் அடிப்படையில், 2021-2022 மற்றும் 2023-2024 க்கு இடைப்பட்ட காலத்தில், அசாம் மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்களில் உள்ள 1,132 கிராமங்களில் குழந்தை திருமணங்கள் 81% குறைந்துள்ளது” என தெரிகிறது.

2021-22 இடைப்பட்ட காலத்தில் 3,225 வழக்குகள் இருந்துள்ளது. இதுவே, 2023 - 2024 இடைப்பட்ட காலத்தில் 627 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் குழந்தை திருமணம் செய்து கொண்ட வழக்கில் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கடுமையான சட்டம் அமலாக்கப்பட்டதே குழந்தை திருமணம் குறைந்ததற்கான காரணம் என்று 98% பேர் தெரிவித்துள்ளனர்.

நிலுவையில் உள்ள வழக்குகள்

மேலும் இது குறித்து இந்த அறிக்கை தெரிவிப்பது என்னவென்றால், ”2022 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட 3,563 குழந்தை திருமண வழக்குகளில், வெறும் 181 வழக்குகளுக்கு மட்டுமே விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் 92%, பெற்ற தண்டனையின் விகிதம் 11%”

இந்த அதிர்ச்சிகரமான ஆய்வின் முடிவுகள் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? என்ற பெரிய அச்சத்தை குழந்தை நல ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்தாலே, பல குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.