இந்தியர்களிடம் உயர் ரத்தக்கொதிப்பு அதிகரித்து வருவதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு வருடமும் ரத்தக்கொதிப்பு காரணமாக சுமார் 9 மில்லியன் பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று இந்தியர்களிடம் உயர் ரத்தக்கொதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நகரவாசிகள், கிராமவாசிகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ரத்தக்கொதிப்பு அதிகரித்து வருவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. சாதாரணமாக இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 72ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்தியர்களை பொறுத்தவரை நிமிடத்துக்கு 80 என்ற வீதத்தில் இதயத்துடிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியர் தொடர்பாக நடத்தப்பட்ட இதய சோதனையில் மற்ற நாட்டு மக்களைக்காட்டிலும் இந்தியர்களுக்கு உயர் ரத்தக்கொதிப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. பொதுவாக காலை வேளையைக் காட்டிலும், மாலையில்தான் இந்தியர்களுக்கு உயர் ரத்தக்கொதிப்பு அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் உபேந்திரா காவுல், உயர் இரத்த அழுத்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த முழுமையான தரவை இந்த ஆய்வு முன்வைக்கிறது. இந்தியாவில் இதய மருத்துவம் தொடர்பான அவசியம் அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் உறுதிபடுத்துகிறது. இது இதய மருத்துவம் தொடர்பான சிறந்த நடைமுறைகளை வடிவமைக்க உதவும் எனத் தெரிவித்தார்.
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்கள் உட்பட உடலில் உள்ள பல உறுப்புகளை பாதிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். உடலின் ஆரோக்யத்துக்கே பிரச்னையை உண்டு செய்யக்கூடிய அளவுக்கு ரத்த கொதிப்பு ஆபத்தானது எனவும், இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.