இந்தியா

ராகுல் காந்திக்கு விரைவில் புது பதவி

ராகுல் காந்திக்கு விரைவில் புது பதவி

Rasus

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அக்டோபர் மாதம் பதவியேற்பார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தற்போது சோனியா காந்தி உள்ளார். துணைத் தலைவராக தனது பணியை செய்து வருகிறார் அவரது மகன் ராகுல் காந்தி. சோனியா காந்திக்கு அவ்வப்போது உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் அவருக்கு கட்சிப் பணிகளை திறம்பட கவனிக்க முடியவில்லை. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கூட, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே மிஞ்சியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சோனியா காந்தி தாமாகவே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அப்போது பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸின் பல மூத்த தலைவர்கள், ராகுல் காந்தியை விரைவில் தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தி வருவது நினைவு கூரத்தக்கது.

கடந்த 1998-ம் ஆண்டு ஆண்டு முதல் சோனியா காந்தி, கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.