new parliament building  PTI
இந்தியா

சிறப்பு பூஜைகள் முதல் பிரதமர் மோடியின் உரை வரை...! இன்று திறக்கப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடம்

காலை 7.30 அளவில் மகாத்மா காந்தி சிலை அருகே, பூஜைகள், ஹோமங்கள் தொடங்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத்தலைவர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

PT WEB

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனகர்த்தர்கள் பங்கேற்கின்றனர். 19 கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

காலை 7.30 அளவில் மகாத்மா காந்தி சிலை அருகே, பூஜைகள், ஹோமங்கள் தொடங்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா,

மாநிலங்களவைத் துணைத்தலைவர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள். பூஜைகளைத் தொடர்ந்து, காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் செங்கோல் வைக்கப்படுகிறது. மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பேழையில், பிரதமர் மோடி, செங்கோலை நிறுவுகிறார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படும் செங்கோலை தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள 100க்கும் அதிக ஆதீனங்கள் சிறப்பு செய்ய உள்ளனர். 9.30 மணி அளவில், சங்கராச்சாரியார்கள், பண்டிட்கள், துறவிகள் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடு செய்ய உள்ளனர். திறப்பு விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிகள் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. தேசிய கீதத்துடன் தொடங்கும் விழாவில் 2 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. மாநிலங்களவை துணைத்தலைவர் வரவேற்புரை ஆற்றுகிறார்.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரின் வாழ்த்துரைகள் வாசிக்கப்பட உள்ளன. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

மல்லிகார்ஜூன கார்கே விழாவில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழாவில் கார்கே பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றிய பின், திறப்பு விழாவின் நினைவாக நாணயம் ஒன்றையும், தபால் தலையையும் வெளியிடுகிறார். இறுதியாக பிரதமர் நரேந்திர மோடியின் உரையுடன் பகல் 2.30 மணி அளவில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நிறைவடைய உள்ளன.