இந்தியா

கொரோனா எதிரொலி: மணமக்கள் உள்பட எல்லோருக்கும் மாஸ்க்..!

கொரோனா எதிரொலி: மணமக்கள் உள்பட எல்லோருக்கும் மாஸ்க்..!

webteam

கொரோனா எதிரொலியாக திருமண நிகழ்வு ஒன்றில் புதுமண தம்பதிகள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்துகொண்டு சடங்குகளை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பிரதான அறிவுரையாக உள்ளது. அதேபோல் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு முகக்கவசங்கள் அணிவதைக் காட்டிலும் கைகளை கழுவுவதுதான் மிகச்சரியான தடுப்பு முறை எனவும் தெரிவித்துள்ளது.

ஆனாலும் யாருக்கேனும் சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும் வகையில் முகக்கவசம் போட்டுக்கொள்வது நல்லது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த அறிவுறுத்தல்களை பல்வேறு வகையில் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரபிரதேசம் மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உங்குட்டூர் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் சடங்கு நிகழ்ச்சிகளின்போது புதுமண தம்பதிகள், ஐயர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்துக்கொண்டு விழிப்புணர்வுடன் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.