இந்திய கடற்படைக்கு புதியவகை இலகுரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து விரைவில் வர இருப்பதாக இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங் தகவல் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 96வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவுவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங் கலந்துகொண்டு தலைமை தாங்கினர். கடற்படை வீரர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு பின்னர், அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சி நிறைவு பெற்ற 7 பைலட்டுக்கு சான்றிதழ்களையும் சிறப்பாக பயிற்சி பெற்றவர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.
பயிற்சியின் போது அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக பயிற்சி பெற்ற பவன்ராஜ் என்ற பைலட்டுக்கு கேரள கவர்னர் சுழற்கோப்பை விருதினை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து இவ்விழாவில் பேசிய தலைமை தளபதி அஜேந்திரா பகதூர் சிங்...
"இந்திய கடற்படையில் விரைவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் சேர்க்கப்பட உள்ளது. மேலும் எம்எச் 60 ஆர் என்ற மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஹெலிகாப்டர் சேர்க்கப்பட இருக்கிறது. புதியவகை இலகுரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து விரைவில் வர இருக்கிறது. இதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.