இந்தியா

எளிமையாக சார்ஜ் போட பலரையும் ‘ஐ’ போட வைத்த ஐடியா

எளிமையாக சார்ஜ் போட பலரையும் ‘ஐ’ போட வைத்த ஐடியா

Rasus

மொபைல் போனை சார்ஜ் போட யாரோ ஒருவர் மேற்கொண்ட புதுவகையான முயற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் சிறிய எண்ணத்தில் தோன்றியவைதான். ஆனால் அதற்கான முயற்சிகள் பல இருக்கும். ‘பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்’ என்ற பாடல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. பறவை பறக்கிறது.. நம்மால் ஏன் பறக்க முடியவில்லை என்ற சிறிய எண்ணம்தான் விமானம் கண்டுபிடிக்க ஒரு முயற்சியாக இருந்தது என்பர்.

இப்படித்தான் சின்னச் சின்ன முயற்சிகள் அனைவருக்கும் தேவையாகும்போதுதான் சாதனை சாத்தியப்படுகிறது. ஸ்மார்ட்போன் உலகில் இப்போது சார்ஜ் போடுவது பெரிய பிரச்னையாகிவிட்டது. சிலவகை போன்கள் வெறும் 5 மணி நேரத்திலேயே சார்ஜ் தீர்ந்துவிடுகிறது. எனவே பெரும்பாலான நேரத்தில் சார்ஜ்யும், கையுமாக திரிய வேண்டியிருக்கிறது. அதற்காகவே தனியாக பேக் அப் பேட்டரிகளும் சந்தைக்கு வந்துவிட்டன.

சரி, விஷயத்திற்கு வருவோம். நாம் மொபைல் போனை சார்ஜ் போடும்போது பிளக் பாயிண்ட் சற்று உயரத்தில் இருந்து, சார்ஜர் வயர் சற்று நீளம் குறைவானதாக இருந்தால் செல்போனை தரையில் வைக்க முடியாது. எனவே ஏதாவது மேசை உள்ளிட்ட உயரமான பொருட்கள் மீது செல்போனை வைத்து சார்ஜ் போடுவோம். இல்லையென்றால் கைத்தாங்கலாக செல்போன் சார்ஜ் ஏறும்வரை அதனை கையில் வைத்திருப்போம்.

இதனை உணர்ந்த யாரோ ஒருவர் செல்போனை சார்ஜ் செய்யும்போது அதனை வைக்க, புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதுதொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது செல்போன் சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போது, மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் செல்போனை எளிமையான முறையில் வைக்கும்படி அவரின் முயற்சி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை மகேந்திரா குரூப்பின் சேர்மன் ஆனந்த் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பிற்கு பெரிய பொருட் செலவோ அல்லது வேறு ஏதுவும் தேவை இல்லை. சிறிய ஐடியா இருந்தால் போதும். இதனிடையே இந்தக் கண்டுபிடிப்பு நாசாவில் கூட இருக்காது என சிலர் தெரிவித்து வருகின்றனர்.