இந்தியா

சுஷில் சந்திரா நாளை மறுநாள் ஓய்வு - அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

சுஷில் சந்திரா நாளை மறுநாள் ஓய்வு - அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

சங்கீதா

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திரா நாளை மறுநாள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ராஜீவ் குமார் மே 15 முதல் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கிறார்.

ஜார்கண்ட், பீகார் மற்றும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய ராஜீவ் குமார் தற்போது தேர்தல் ஆணையராக உள்ளார். மூத்த தேர்தல் ஆணையரை அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கும் மரபுப்படி, ராஜீவ் குமாரை அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு, வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 324 ஆவது சட்டப்பிரிவின் இரண்டாம் பாகத்தின் படி, குடியரசுத் தலைவர், ராஜீவ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்துள்ளார் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் குமாருக்கு எனது நல்வாழ்த்துக்கள் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 1984 ஆம் வருடம் ஐஏஎஸ் சேவையில் இணைந்த ராஜீவ் குமார், பதவியிலிருந்து ஓய்வு பெறும் முன் மத்திய அரசின் செயலாளராக பணிபுரிந்தார். நிதித்துறை செயலாளராக 2020 ஆம் வருடத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் "பப்ளிக் என்டர்பிரைசஸ் செலக்சன் போர்டு" என்று அழைக்கப்படும் அரசு நிறுவனங்களுக்கு மூத்த அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நான்கு மாதங்கள் மட்டுமே அந்த பொறுப்பில் இருந்த ராஜீவ் குமார், 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவருக்கு முன்பு தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா மற்றும் சுசில் சந்திரா பதவி உயர்வு பெற்று தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில், ராஜீவ் குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையில், தேர்தல் ஆணையம் குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஆயதங்களை செய்து வருகிறது.

அடுத்த கட்டமாக 2024 ஆம் வருடத்திலேயே பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜீவ் குமார் ஒரு அனுபவம் நிறைந்த நிர்வாகி என்பதால் அடுத்தகட்ட நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவார் என அதிகாரிகள் கருதுகின்றனர். தனது ஓய்வு நேரத்தில், ராஜீவ் குமார் ட்ரக்கிங் மற்றும் மற்றும் இசை ஆகியவற்றை விருப்பமான பொழுதுபோக்குக்காக கொண்டுள்ளார் என்பது சுவாரஸ்யமானது.

- கணபதி சுப்பிரமணியம், புது டெல்லி.