இந்தியா

அறுவை சிகிச்சை அறைக்குள் நாய் கடித்து இறந்த பச்சிளம் குழந்தை? - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்

jagadeesh

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த நாய் ஒன்று பச்சிளம் குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பருக்காபாத் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மாநிலத்தின் முக்கிய நகரான கான்பூரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்த மருத்துவமனையில் புதிதாக ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த சில மணி நேரங்களில் உறவினர்களுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் இருந்த குழந்தையின் உறவினர் ஒருவர், அறுவை சிகிச்சை அறையில் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் சிலர் நாயை விரட்டியதை பார்த்துள்ளார்.

மேலும் குழந்தை தரையில் கிடத்தப்பட்டிருந்ததையும், அப்போது குழந்தையின் உடலில் காயம் இருப்பதையும் உறவினர்கள் பார்த்துள்ளனர். ஆனால், மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரில் தங்களுடைய குழந்தை இறந்து பிறக்கவில்லை என்றும் அறுவை சிகிச்சை அறையில் இருந்த நாய்தான் குழந்தையை கடித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மன்வேந்திர சிங், விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மாநிலத்தின் தலைமை மருத்துவ அதிகாரியின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய குழந்தையின் தந்தை ரவி குமார், “திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு என் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்தேன். சி செக்ஷன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க, மனைவியை மருத்துவமனையின் அறுவை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு மனைவியை வார்டுக்கு மாற்றினர். குழந்தை சில மணி நேரம் கழித்தே கொண்டு வரப்படும் என தெரிவித்தனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக சில மணி நேரம் கழித்து தகவல் தெரிவித்தனர். ஆனால் என்னுடைய உறவினர்கள் அறுவை சிகிச்சை அறையில் இருந்து நாயை விரட்டியதும், குழந்தை காயத்துடன் தரையில் கிடந்ததையும் கவனித்துள்ளனர்” என தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனை உரிமையாளர் விஜய் படேல் கூறும்போது, “குழந்தை இறந்த பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை நாய் கடித்ததால் இறந்ததா? அல்லது அறுவை சிகிச்சை அறையில் நாய் இருந்ததா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.