வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். இதில் மலைப் பகுதிகளில் வசிக்கும், ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிவரும் மெய்டீஸ் சமூகத்தினருக்கு எதிராக குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக எழுந்த மோதல் காரணமாக, கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மணிப்பூரின் 8 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் மணிப்பூர் மாநிலமே தீயில் கருகியது. பல கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன.
இதையடுத்து, ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், பொதுமக்களும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். நிலைமை சீரானதாகச் சொல்லப்பட்டாலும் அவ்வப்போது அங்கு இரண்டு தரப்புக்கும் மோதல் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அடிக்கடி இணையச் சேவை அம்மாநிலத்தில் துண்டிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கலவரத்தால் 50,698 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகவும், அவர்கள் 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மியான்மரின் எல்லைக்கு அப்பால் இருந்து கணிசமான அளவு ஹெராயின் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாகவும், மணிப்பூரின் மலைப்பாங்கான பகுதிகளில், அதிகளவில் கசகசா பயிரிடப்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக மணிப்பூர் மாநில மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் குக்கி இன மக்கள் அதிகளவில் கசகசாவைப் பயிரிடுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், மியான்மர் எல்லையை ஒட்டிய மணிப்பூரின் மலை மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர், ’கசகசா பயிரிட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என 30க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அந்த எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி, அவர்கள் கசகசாவைப் பயிரிடுவதாகத் தெரிகிறது. அரசியல் மற்றும் இன ரீதியான பின்புலம் இதற்கு காரணமாக இந்த செயல்களுக்கு உள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, இதற்கு வாக்குவங்கியும் முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர, கிராமத் தலைவர்கள் உரிமை கொண்டாடும் மலை நிலங்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அரசாங்க தரவுகளின்படி, மலைப்பாங்கான மாவட்டங்களில்தான் கசகசா அதிகமாக வளர்க்கப்படுவதாகவும், அவற்றில் பல குக்கி பழங்குடியினரால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன எனவும் பிற இனக் குழுக்களால் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் மணிப்பூரில் உள்ள குக்கி பழங்குடியினரின் அமைப்பு ஒன்றின் முன்னாள் தலைவரான கைமாங் சோங்லோய், ”இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதுடன், பிற பகுதிகளிலும் கசகசா விளைகிறது” என்கிறார்.
அதேநேரத்தில், 2017ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும், போதைப்பொருள் துறை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் துணையுடன் அறுவடை காலத்தில் கசகசா பயிர்களை அழிக்க அனுப்பப்படுகின்றனர். ஆயினும் மணிப்பூரில் கசகசா பெருகி வருவதுதான் தற்போதைய குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனால், மணிப்பூர் மாநிலம் போதைப்பொருள் உற்பத்திக்கு வழிவகுப்பதாகப் புகார் சொல்லப்படுகிறது. இதை ஒரு காரணமாக வைத்துத்தான் மெய்டீஸ் - குக்கி ஆகிய இனத்தவருக்கு இடையே ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தின்போது பல ஏக்கர் கசகசா பயிர்கள் நாசமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது கசகசாவை அழிக்கும் நோக்கில் காடுகளுக்கு தீவைத்ததாகவும் பேசப்படுகிறது. இதில் நடப்பு ஆண்டு 3,200 ஏக்கர் கசகசா பயிர் நாசமானதாகவும், கசகசாவை வளர்ப்பதற்காக மணிப்பூர் மக்கள் மீது வழக்கோ, கைதோ பாயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், போதைத் தன்மை வாய்ந்த தாவரத்தை வளர்க்கப் பயன்படுத்தப்படும் நிலத்தின் அளவு 1,853இல் இருந்து 6,742.8 ஏக்கராக மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது என்று மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம், மலைகளில் விளையும் கசகசாவை அழிப்பதில் மாணவர்களும் தன்னார்வலர்களும் பெரும்பாலும் போலீஸ் குழுக்களுடன் சேர்ந்துகொள்கிறார்கள். மறுபுறம், பணம் சம்பாதிப்பதற்காக கசகசா அறுவடை பணியின்போது ஈடுபடுபவர்களும் அதிகம் உண்டு. அந்த நேரத்தில்தான் அவர்கள் ஒருநாளைக்கு ரூ.1,000 வரை சம்பாதிக்கிறார்கள் என்கிறனர். விரைவான வளர்ச்சி, உறுதியான கொள்முதல், நல்ல வருமானம் ஆகியவற்றின் காரணங்களாலேயே மாநில அரசின் காவல் துறையின் எதிர்ப்பையும் மீறி கிராமவாசிகள் கசகசா பயிர்களை வளர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.
கசகசாவை பயிரிடும் விவசாயிகள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதும் அவர்களின் பணத் தேவைக்காகவே இத்தகைய செயலைச் செய்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. 60 நாட்களில் அறுவடை செய்யப்படும் கசகசா பயிர்களால், ஓர் ஏழைக் குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கான வருமானத்தை எடுக்க முடியும் என்கின்றார்கள். அதாவது, விவசாயிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டால், அவர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்க முடியும். ஆனால் கசகசாவைப் பயிரிடுவதன் மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என அங்குள்ள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கசகசா மூலம் பல்வேறு போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும், அவற்றை மலைப் பகுதிகளிலேயே மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
கசகசா என்பது, இந்தியாவில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இது வெளிநாடுகளில் போதைப் பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கசகசாவை ஆங்கிலத்தில் ஓபியம் பாப்பி என்கிறார்கள். ஓபியம் செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து கசகசா பெறப்படுகிறது.
இந்த விதைப்பைகளை முற்றவிடாமல் அவை காய்வதற்கு முன்பே பச்சையாக இருக்கும்போது விதைப்பையைக் கீறி அதனுள் இருந்து வடியும் பாலைச் சேகரித்தால் அதுதான் ஓபியம். இந்த ஓபியமும் ஒரு போதைப்பொருள் ஆகும். மது, புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது.
கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால்தான் வெளிநாடுகளில் (சவூதிஅரேபியா, கத்தார், துபாய், ஓமன்) கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.
கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்டவிரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கசகசாவிற்கு நோய்த் தடுப்பாற்றலும் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.