பிரதமர் மோடி pt web
இந்தியா

“சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக்கூட பேசியதில்லை” பிரதமர் மோடி

PT WEB

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து கட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.

அப்போது பேசிய அவர், “நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நான் இதுவரை ஒருவார்த்தைக்கூட பேசியதில்லை. சிறுபான்மையினரை வைத்து காங்கிரஸ் செய்யும் வாக்கு வங்கி அரசியலைப் பற்றிமட்டுமே நான் பேசிவருகிறேன். இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினரை சமாதானப்படுத்த எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியலை வெளிக்கொணரும் நோக்கத்துடன்தான் பரப்புரை செய்துவருகிறேன்.

அனைவருக்கும் சமமான வளர்ச்சி இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மட்டும் சிறப்பானவர்களாக கருத தாங்கள் தயாராக இல்லை” என கூறினார்.

பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய அவர், “சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவை சுதந்திரமாக செயல்படும் மத்திய விசாரணை முகமைகள். ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சிறந்த முறையில் இந்த அமைப்புகள் ஈடுபட்டன. என் 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது” என சுட்டிக்காட்டினார்.