விவேகானந்த் pt web
இந்தியா

தெலங்கானாவின் பணக்கார வேட்பாளர்; 606 கோடி சொத்து மதிப்புடன் காங்கிரஸ் வேட்பாளர் முதலிடம்

சென்னூர் காங்கிரஸ் வேட்பாளர் விவேகானந்த் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிக செல்வந்தராக அறியப்படுகிறார்.

Angeshwar G

ஐந்து மாநில தேர்தல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் மட்டும் அதே தேதியில் நடந்தது. இரண்டாம்கட்டத் தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதியும் தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது.

2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரித்து தெலங்கானா உருவாக்கப்பட்டதில் இருந்து ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகராவ் தான் முதலமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் நவம்பர் 30 ஆம் தேதி நடக்கும் தேர்தல் பிரசாரங்கள் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இருந்தபோதும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மொத்தமாக 4798 வேட்பாளர்கள் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். நவம்பர் 13 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும், நவம்பர் 15 ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்புதான் தற்போது அங்கு பேசுபொருளாகியுள்ளது.

சென்னூர் காங்கிரஸ் வேட்பாளர் விவேகானந்த் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிக செல்வந்தராக அறியப்படுகிறார். அவருக்கு மொத்தமாக ரூ. 606.66 கோடிக்கு சொத்துமதிப்பு உள்ளது. அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கிட்டத்தட்ட ரூ.41.5 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னால் பாஜக எம்.பி.யான விவேகானந்த் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே காங்கிரஸ் கட்சியைச் சேட்ந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.460 கோடி சொத்துமதிப்பு உள்ளது. பாலையார் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீனிவாச ரெட்டிக்கு ரூ.44 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளான நவம்பர் 9 ஆம் தேதி ஸ்ரீனிவாச ரெட்டி வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. முதலில் பிஆர்எஸ் கட்சியில் இருந்த ஸ்ரீனிவாச ரெட்டி, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு பின் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஸ்ரீனிவாச ரெட்டி, ராஜ் கோபால் ரெட்டி

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வேட்பாளர் ராஜ் கோபால் ரெட்டிக்கு ரூ.459 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் பைலா சேகர் ரெட்டி தனக்கு 227 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு 83 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.